உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு, நெரிசலான பேருந்து அல்லது ரயில் பயணத்தின் முடிவில் கூட்டத்தில் இருந்து வெளியேறிய பின் அல்லது கொளுத்தும் கோடை வெயிலில் நாள் முழுவதும் செயல்படும் சூழலை எதிர்கொண்ட பிறகு என ஏதாவது ஒரு தருணத்திலாவது ஏறக்குறைய அனைவரும் இதை அனுபவித்து இருப்போம்.
இப்படியான சூழ்நிலையில் திடீரென அக்குள் பகுதியில் இருந்து விரும்பத்தகாத துர்நாற்றம் வருவதை உணர்ந்திருப்போம். மேலும் அதற்கு நம் வியர்வையே காரணம் என்றும் பலர் கருதியிருப்போம். ஆனால் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, உடலில் இருந்து வெளியேறும் வியர்வை பெரும்பாலும் மணமற்றதாகவே உள்ளது.
மறுபுறம், உடல் துர்நாற்றத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட வாசனை, வியர்வை, சருமத்தில் உள்ள பாக்டீரியாக்கள், அக்குள் பகுதியின் தனித்துவமான சூழல் ஆகியவற்றுக்கு இடையே உள்ள சிக்கலான இடைவினையின் விளைவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
"உடல் துர்நாற்றம் வியர்வையால் ஏற்படுவதில்லை, மாறாக சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களின் செயல்பாட்டால் ஏற்படுகிறது," என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை மையம் கூறுகிறது.
