6 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்! 7-வது திருமணத்தில் வசமாக சிக்கிய பகீர் பின்னணி!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகிலுள்ள கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த தனபால் (வயது 33) என்பவருக்கும், மதுரையைச் சேர்ந்த சந்தியா (வயது 26) என்பவருக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமண ஏற்பாடுகளை மதுரை புரோக்கர் பாலமுருகன் செய்திருந்தார். சந்தியா தரப்பில் அவரது சகோதரி மற்றும் மாமா மட்டும் கலந்து கொண்டனர். திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு சந்தியா திடீரென காணாமல் போனார். அவரது கைப்பேசி எண் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகைகள், திருமணப் புடவைகள் உள்ளிட்டவை காணாமல் போயிருந்தன. சந்தியாவின் உறவினர்கள் என்று சொல்லப்பட்டவர்களின் தொடர்பு எண்களும் செயலிழந்து போயின. இதனால் அதிர்ச்சியடைந்த தனபால், பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதே புரோக்கர் கும்பல் சந்தியாவின் புகைப்படத்தை மற்றொரு இளைஞருக்கு திருமணத்துக்கு அனுப்பியதை தனபால் அறிந்து கொண்டார். இதனால் சந்தேகம் அதிகரித்த அவர், போலீஸாருடன் கலந்தாலோசித்து ஒரு திட்டம் தீட்டினார். திருச்செங்கோட்டில் மற்றொரு திருமணம் நடைபெறுவது போல பொய்யான ஏற்பாடு செய்து, சந்தியா, புரோக்கர் தனலட்சுமி, அவரது உறவினர் அய்யப்பன் மற்றும் ஓட்டுநர் ஜெயவேல் ஆகியோரை அங்கு வரவழைத்தார். அவர்கள் வந்தவுடன், தனபால் மற்றும் அவரது குடும்பத்தினர் அவர்களைச் சுற்றி வளைத்து, பரமத்திவேலூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் சந்தியா முக்கிய தகவல்களை வெளியிட்டார். அவர் ஏற்கனவே ஆறு திருமணங்கள் செய்து தப்பியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இந்தக் கும்பல் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலித் திருமணங்கள் நடத்தி வருவதாகவும், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 12க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் போலீஸார் கண்டறிந்துள்ளனர். ஒவ்வொரு திருமணத்துக்குப் பிறகும் சந்தியா 1-2 நாட்கள் மட்டும் தங்கி, ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தில் தப்பிச் செல்வார் என்றும் தெரிய வந்தது.
போலீசார் சந்தியா, தனலட்சுமி, அய்யப்பன், ஜெயவேல் உள்ளிட்டோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். மற்ற கும்பல் உறுப்பினர்களைத் தேடி போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வழக்கு 8 பேருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் திருமண ஏற்பாடுகளில் முழு விவரங்களைச் சரிபார்த்து, நம்பகமான ஆதாரங்களுடன் மட்டும் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

Post a Comment

Previous Post Next Post