ஒன்ஸ் மோர் முதல் விஷ்ணு வரை; அம்மா ஷோபாவுடன் இணைந்து விஜய் பாடிய மெகாஹிட் பாடல்கள்
சினிமாவில் நடிகராக மட்டும் இல்லாமல் பாடகராகவும் முத்திரை பதித்த விஜய், 1994-ம் ஆண்டு வெளியான தனது ரசிகன் படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த தளபதி விஜய், ஒரு சிறந்த பாடகராகவும் பல பாடல்களை கொடுத்துள்ளார். அதேபோல் விஜய் அம்மா ஷோபாவும் ஒரு சிறந்த பாடகியாக முத்திரை பதித்தவர். விஜய் தனது அம்மாவுடன் இணைந்து பாடிய 3 பாடல்களுமே பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 1992-ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய். அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வந்த விஜய் தற்போது நடிப்பில் இருந்து விலகி அரசியல் கட்சியின் தலைவராக மாறியுள்ளார். கடந்த 2024-ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார்.
சினிமாவில் நடிகராக மட்டும் இல்லாமல் பாடகராகவும் முத்திரை பதித்த விஜய், 1994-ம் ஆண்டு வெளியான தனது ரசிகன் படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார். அதன்பிறகு தான் நடித்த பல படங்களில் ஓரிரு பாடல்கள் பாடியுள்ளார். கடைசியாக வெளியாக கோட் படத்திலும் பாடல்கள் பாடியிருந்தார். அதிகபட்சமாக தான் நடித்த தேவா, கோட், விஜயகாந்த் நடித்த பெரியண்ணா, ஆகிய படங்களில் விஜய் தலா 3 பாடல்களை பாடியுள்ளார். அதேபோல் தனது படங்களில், தனது அம்மா ஷோபா சந்திரசேகருடன் இணைந்து 3 பாடல்களை விஜய் பாடியுள்ளார்.
1995-ம் ஆண்டு வெளியான விஷ்ணு படத்தில் ‘தொட்டபெட்டா ரோட்டுமேல முட்ட பரோட்டா’ என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை விஜயுடன் இணைந்து பாடியவர் அவரது அம்மா ஷோபா சந்திரசேகர். அதேபோல் 1997-ம் ஆண்டு வெளியான ஒன்ஸ்மோர் என்ற படத்தில் இடம் பெற்ற ‘ஊர்மிளா ஊர்மிளா’ என்ற பாடலை இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இந்த இரு பாடல்களுமே இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்’பை பெற்று வருகிறது.
1994-ம் ஆண்டு வெளியான ரசிகன் படத்தில், லவ் மாமா, சிவகாசி படத்தில் கோடம்பாக்கம் ஏரியா, வேட்டைக்காரன் படத்தில் உச்சி மண்டையில் சுர்ருங்குது, சுறா படத்தில் நான் நடந்தால் அதிரடி உள்ளிட்ட பாடல்களை விஜய் படத்திற்காக ஷோபா சந்திரசேகர் பாடியுள்ளார். 1967-ம் ஆண்டு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இருமலர்கள் படத்தில் பாடகியாக தனது பயணத்தை தொடங்கியர் ஷோபா சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.
