கோல்மால் என்ற படத்தின் மூலம் 2003 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் கேரளாவைச் சேர்ந்த மீரா வாசுதேவன்.
தொடர்ந்து அதே ஆண்டில் இந்தியில் ரூல்ஸ் பியார் கா சூப்பர்ஹிட் ஃபார்முலா என்ற படத்திலும், தமிழில் உன்னை சரணடைந்தேன் என்ற படத்தின் மூலமாகவும் எண்ட்ரீ கொடுத்தார். தமிழில் முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசின் விருதைப் பெற்று கவனிக்க வைத்தார்.
இதன் பின்னர் அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்டநாயகன், குமரி பெண்ணின் உள்ளத்திலே, அடங்க மறு என குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். மலையாள சினிமாவில் 30க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்து ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக வலம் வருகிறார். சினிமா மட்டுமல்லாது சீரியலிலும் மீரா வாசுதேவன் நடித்திருக்கிறார்.
கணவரை பிரிந்ததாக அறிவிப்பு
இதனிடையே அவர் தனது 3வது கணவரை பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளார். நவம்பர் 17ம் தேதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நான் அதிகாரப்பூர்வமாக சிங்கிள் ஆக இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நான் என் வாழ்க்கையின் மிக அற்புதமான மற்றும் அமைதியான கட்டத்தில் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அதன்படி நடிகை மீரா வாசுதேவன் தனது மூன்றாவது கணவரான விபினை விவாகரத்து செய்துள்ளார். அவரும், ஒளிப்பதிவாளரான விபினும் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் கோயம்புத்தூரில் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினர் முதன்முதலாக மலையாளத்தில் 2020 ஆம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை ஒளிபரப்பான குடும்பவிளக்கு சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்ததாக கூறப்படுகிறது. விபின் பல தொலைக்காட்சி தொடர்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
மேலும் விபினுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் நீக்கியுள்ளார். திருமண புகைப்படம் முதற்கொண்டு நீக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
நடிகை மீரா வாசுதேவன், 2005 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் மகன் விஷால் அகர்வாலை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் அவர்கள் ஜூலை 2010 இல் விவாகரத்து செய்து கொண்டனர். இதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு, மலையாள நடிகர் ஜான் கொக்கனை மணந்தார்.
இந்த தம்பதியினருக்கு அரிஹா என்ற மகன் உள்ளார். ஆனால் 2016ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். இந்த நிலையில் 43 வயதான அவர், மீண்டும் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறாரா அல்லது சிங்கிளாக வாழ்க்கையை கழிக்கப் போகிறார் என இணையவாசிகள் பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர். எப்படியாயினும் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் இருக்க ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

